சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது, அரபிக் கடலில் மகா புயலானது இன்று அக்டோபர் 31ம் தேதி காலை 8.30 மணிக்கு உருவானது. இது தற்போது லட்சத் தீவு அருகே நிலவுகிறது.
தற்போது இது அமலித் தீவுக்கு அருகே வடகிழக்கு திசையில் சுமார் 40 கி.மீ. தொலைவில் நிலவி வருகிறது.
இதுதொடர்ந்து இன்று மதியம் அளவில் தீவிரப் புயலாக மாறி லட்சத் தீவுகளைக் கடந்து வடமேற்கு திசையில் நகரும்.
இதன் காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுவையில் பரவலாக மழை பெய்துள்ளது. தமிழகத்தில் சுமார் 33 இடங்களில் கன மழையும், 4 இடங்களில் மிகக் கனமழையும் பெய்துள்ளது. அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் கொடநாட்டில் 14 செ.மீ. மழையும், குன்னூரில் 13 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது.
அடுத்து 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுவையில் அநேக இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. கனமழையைப் பொறுத்தவரை தென் தமிழக மாவட்டங்களான குமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களிலும், வட மாவட்டங்களான ஈரோடு, தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல், திருப்பூர் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளான நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல் ஆகிய மலைப் பகுதிகளில் ஓரிரு இடங்களிலும் கன மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது.
நவம்பர் 4ம் தேதி புதிய புயல் உருவாக்கம்